Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா என்ன? – திருநாவுக்கரசரின் கருத்தால் அதிர்ச்சி

thirunavukkarasar answer
Author
First Published Dec 16, 2016, 11:22 AM IST


மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதால், ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா என்ன …? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். இவரது கருத்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். வங்கிகளில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் தர மறுக்கிறார்கள்.

சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சென்றது எப்படி? மேலும் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகளுக்கு மட்டும் கூடுதலாக பணத்தை அனுப்பப்படுகிறது. இதுபோன்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகள் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பல சிலரின் வசம் இருக்கிறது. இதுபோன்ற சொத்துகளை மீட்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்றார்.

பின்னர் நிருபர்கள்,திருநாவுக்கரசரிடம் சிலகேள்விகளை முன் வைத்தனர்.

கேள்வி:– ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனரே?

பதில்:– முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கவும், அந்த ஆட்சியை அப்புறப்படுத்தவும் கூடிய வலிமையை பெற்றவராக விளங்கியவர். கோடான கோடி தொண்டர்களின் தலைவராக திகழ்ந்தவர். அவரின் திடீர் மறைவு துரதிருஷ்டவசமானது. அவரின் மறைவுக்கு பிறகு வரும் வதந்தி தேவையற்றது.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது. ஜெயலலிதாவுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். அவர்கள் எல்லோரும் பொய் சொல்கிறார்கள்? இதை நான் நம்பவில்லை.

வெள்ளை அறிக்கையாக இருந்தாலும், கருப்பு அறிக்கையாக இருந்தாலும் அதை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்து விட போகிறாரா?. அவரின் மரணம் குறித்து வதந்தி அவசியம் இல்லாதது.

கேள்வி:– நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

பதில்:– பூரண மதுவிலக்கு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று தான் நாங்கள் போராடி வருகிறோம். தமிழக அரசு முதலில் 500 மதுக்கடைகளை அகற்ற முடிவு செய்தார்கள். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை, பேச்சும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios