Asianet News TamilAsianet News Tamil

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரானார் திருமாவளவன்; கட்சி நிர்வாகிகளும் உடன் ஆஜர்...

Thirumavalavan who appeared in Mayiladuthurai court with Party executives
Thirumavalavan who appeared in Mayiladuthurai court with Party executives
Author
First Published Apr 20, 2018, 8:37 AM IST


நாகப்பட்டினம் 

பொது சொத்துகளை சேதப்படுத்தி காவலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட பின்னரே திருமாவளவன் மற்றும் விசிக கட்சி நிர்வாகிகள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி கட்டாய மதமாற்ற சட்டத்தைக் கண்டித்து பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மயிலாடுதுறை காவலாளர்கள் அனுமதி கொடுத்தனர். 

அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி மயிலாடுதுறை காவிரி நகரில் அன்று இரவு 7 மணிக்கு புறப்பட்டது. அப்போது காந்திஜி சாலை வழியாக வந்த பேரணியை, கூறைநாடு செம்மங்குளம் என்ற இடத்தில் பிரிந்து காமராஜர் சாலை வழியாக செல்ல காவலாளர்கள் அனுமதி கொடுத்தனர். 

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அனுமதி கொடுத்த பாதையில் செல்லாமல் அனுமதி மறுக்கப்பட்ட காந்திஜி சாலை வழியாகதான் செல்வோம் என்று கூறி காவலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த வாக்குவாதம் முற்றியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அமிர்தகுமார், உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலாளர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவலாளர்கள், திருமாவளவன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் ஈழவளவன், ரவிச்சந்திரன், மோகன்குமார், பொன்னையன், பாரதிமோகன் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக திருமாவளவன் உள்ளிட்ட ஆறு பேரும் ஆஜராகவில்லை. இதனால் கடந்த 16.2.18 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அன்றை தேதியில் யாரும் வராததால் வழக்கை விசாரணை செய்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட ஆறு பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று திருமாவளவன் உள்ளிட்ட ஆறு பேர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அமர்வு நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட வேண்டியிருப்பதால், இந்த வழக்கை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன் உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios