thiruchi student died after Anita and prathiba because of neet exam
திருச்சி
அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்‘ தேர்வால் திருச்சி மாணவி திருச்சி மாணவி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணா தொழிற்சங்க தலைவரின் மகளான இவரைப்பற்றி உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.
"நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற சட்டம் தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்தது.
நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தாண்டு கடந்த 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் மாணவ மாணவிகள் மட்டுமே இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேர்ச்சி பெற முடியாமல்போன மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தங்களது மருத்துவ கனவு தகர்ந்துபோனதை எண்ணி நாள்தோறும் வேதனையில் மூழ்கி உள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் நேற்றுதான் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதீபா மரண செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீபாவின் கடிதம் அனைவரையும் உலுக்கிவிட்டது.
பிரதீபா மரணம் ஏற்படுத்திய சோகம் அடங்குவதற்குள் திருச்சியில் நேற்று இரவு ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பக்கம் உள்ள உத்தமர் கோயிலைச் சேர்ந்தவர் கண்ணன். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் உள்ளார்.
இவரது மகள் சுபஸ்ரீ (17). மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பி இதற்காக துறையூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்தார்.
பிளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதால் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்பு பயிற்சியும் பெற்று நீட் தேர்வினை எழுதினார்.
ஆனால், ‘நீட்’ தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை. 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவரது மருத்துவர் படிப்பு கனவு தகர்ந்தது.
தேர்வு முடிவு வெளியானதில் இருந்தே தந்தை மற்றும் தாயுடன் அதிகம் பேசாமல் இருந்த சுபஸ்ரீ மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்டாராம்.
மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி எண்ணி தனது தோழிகளிடமும் புலம்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சுபஸ்ரீயின் பெற்றோர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது இரவு 10 மணி இருக்கும். சுபஸ்ரீயின் அறையை திறந்து பார்த்ததில் அவர், துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். உடலை கீழே இறக்கி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டார்.
சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி கொள்ளிடம் டோல்கேட் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
