திருவள்ளூர்

திருவள்ளூரில், பெண்ணின் கழுத்தில் இருந்த 1½ சவரன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது அங்குவந்த போலீசார், மக்கள் உதவியுடன் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள காமராஜர் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாலாஜி என்பவரின் மனைவி ஜெயந்தி (35). இவருடைய இரண்டு மகன்கள் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பண்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி பயில்கின்றனர்.

நேற்று தனது மகன்களை பார்ப்பதற்காக பண்பாக்கம் வந்த ஜெயந்தி, அங்கு சுரங்கப்பாதையையொட்டி உள்ள சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள், சட்டென்று ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 1½ சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது ஜெயந்தி அலறியதால், சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள் திருடர்களை நோக்கி வருவதைப் பார்த்து பயந்து போன திருடர்கள், மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அருகே உள்ள தண்ணீர் இல்லாத ஏரியில் இறங்கி தப்பியோடினர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பணியில்ல் ஈடுபட்டிருந்த கவரைப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம், சிவா ஆகியோர் ஏரியில் உள்ள மரங்களுக்கு இடையே பதுங்கி இருந்த திருடர்கள் இருவரையும் மக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் திருவெற்றியூரைச் சேர்ந்த அருள்ராஜ் (20) மற்றும் எர்ணாவூரைச் சேர்ந்த பிரதீப் (20) என்பது தெரிந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள், திருடர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.