பெங்களூருவில் பெல்லந்தூர் ஏரியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடவேண்டும் என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுளளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெல்லந்தூர் ஏரி என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால், மீத்தேன் வெளியேற்றம் காரணமாக ஏற்கனவே 2 முறை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏரியில் இருந்து விஷ நுரை வெளியேறி காற்றில் பறப்பதால் அப்பகுதி மக்களுக்கு தோல் நோய் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஏரி மேம்பாடு மற்றும் பெங்களூரு வளர்ச்சித்துறைகள் ஒரே மாதத்தில் பெல்லந்தூர் ஏரியைத் தூர்வாரி அறிக்கை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏரியில் கழிவு கலக்கும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டதோடு, ஏரியை மாசுபடுத்துபவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.