வளிமண்டலத்தில்  நிலவும் மேலடுக்கு சுழற்சி  காரணமாக  அடுத்த  24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும்  கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதே போன்று தமிழகம் முழுவதும்   கடந்த 10 நாட்களுக்கு மேலாக  பரவலாக மழை பெய்து  விவசாயிகளின் மனதை குளிர வைத்தது. 

வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களில்  நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோழிங்கரில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் ஆக., 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையானது 210 மி.மீ., என பதிவாகியுள்ளது என்றும் இது இயல்பான அளவை விட 33 சதவீதம் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் பலத்த  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

 சென்னையில் இடைவெளி விட்டு மாலை மற்றும இரவு நேரங்களில் ஒரிரு முறை மிதமான மழை வாய்ப்பு உள்ளது. சனி மற்றும் ஞாயிறு முதல் மழையளவு குறைய துவங்கும்  என்று பாலச்சந்திரன்  தெரிவித்தார்.