திருப்பூர்

திருப்பூரில் தலை விரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க “வர்த்தக நிறுவன பயன்பாட்டிற்கு தண்ணீரை விற்பனை செய்யக் கூடாது” என்று புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக அதிகாரிகளுக்கு, ஆட்சியர் எஸ்.ஜெயந்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருப்பூர் மாநகராட்சி வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை, வடிகால் வாரியம் மூலம் காவிரி, பவானி, அமராவதி ஆறுகளை ஆதாரமாக கொண்டு சுமார் 23 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் காவிரியில் இருந்து திருப்பூருக்கு சுமார் 12.5 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் சுமார் 200 ஆழ்குழாய் கிணறு அமைத்து பகுதி வாரியாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது நிலத்தடிநீர் வற்றிய நிலையில் 60 ஆழ்குழாய் கிணற்றில் மட்டுமே ஓரளவு தண்ணீர் உள்ளது. மேலும், பவானி மற்றும் காவிரி ஆறு வறண்டு விட்டதால் அங்கிருந்து குடிநீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.

புறநகர் மாவட்ட பகுதியில் நீராதாரம் முற்றிலும் வற்றிய நிலையில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை எழும்பியுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக குடிநீர் பிரச்சினையை சமாளிக்க வர்த்தக நோக்குடன் ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணறுகளில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.ஜெயந்தி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதில், “திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க வர்த்தக நிறுவன பயன்பாட்டுக்கு தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது என்று புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக நீரேற்று நிலையங்களில் நேற்று முதல் வர்த்தக நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் எப்போதும், தண்ணீர் லாரிகள் அதிகம் நிற்கும், நீரேற்று நிலையங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.