There is no change in ban of 11 different types of plastic - the Collector
நீலகிரி
நீலகிரியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 11 விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பிளாஸ்டிக் தடையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில், அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டையும் தவிர்த்து மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக அனைத்து வணிகர்களுடன் ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இம்மாதம் 15-ஆம் தேதி முதல் 11 விதமான பிளாஸ்டிக் பொருள்களை நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது, அவற்றைப் பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பிளாஸ்டிக் மற்றும் பாயில் பேப்பர் பிளேட்டுகள், தெர்மாகோல் பிளேட்டுகள் மற்றும் கப்புகள், பிளாஸ்டிக் கையுறைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், சில்வர் பாயில் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் மற்றும் பாயில் பரிசுப் பொருள் கவர்கள், லேமினேடட் பிரவுன் கவர்கள், லேமினேடட் பேக்கரி அட்டைப் பெட்டிகள், ஒரு லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை தடை செய்யப்பட்டன.
இத்தடை தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கேரி பேக்குகளை மட்டும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "மருத்துவத் துறையில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவ பிளாஸ்டிக் உபகரணங்கள், பொருள்களுக்கு மட்டும் இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர விதிக்கப்பட்டத் தடையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வியாபாரிகள், மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
