கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும், காதல் கணவனே தன்னை துன்புறுத்தியதாலும் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், தேய்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகள் பத்மா (எ) பத்திரகாளி (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சுமூகமாக சென்றது.

இந்த நிலையில் பத்மாவிடம், கணவர் வீட்டார் 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் கேட்டு கொடுமைப்படுத்திய உள்ளனர். அது மட்டுமல்லாது வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் வேறொரு பெண்ணிடம் செல்போனில் பேசி வருவதை அறிந்த பத்மா வேதனை அடைந்துள்ளார்.

இது குறித்து கணவனிடம், பத்மா கேட்டதற்கு, மோகன்ராஜின் அம்மா அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும், பத்மாவை மோகன்ராஜ் அடித்து துன்புறுத்தி உள்ளார். மோகன்ராஜ், தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வரவே பத்மா விரக்தி மனப்பான்மையில் இருந்துள்ளார். 

தனது மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால், ஒரு லட்சம் பணம் ரொக்கமாகவும், 20 சவரன் நகையும் வரதட்சணையாக கிடைத்திருக்கும் என்று திட்டிய மோகன்ராஜின் தாயார், பத்மாவை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளனர்.

பத்மா எவ்வளவோ கெஞ்சியும், வீட்டுக்குள் விடாமல் மோகன்ராஜ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். தனக்காக நியாயம் கேட்க வந்த தந்தையையும், சகோதரரைம் அடித்ததோடு, போலீசார் அவர்களை பிடித்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே விரக்தியில் இருந்த பத்மா, இந்த சம்பவங்களைப் பார்த்தவுடன், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 

அந்த கடிதத்தில், கணவர் மோகன்ராஜும், அவரது தாயாரும்தான் தனது சாவுக்கு காரணம் என்றும், அவர்களை கைது செய்யுங்கள் என்றும் தவறு செய்யாத என்னுடைய சகோதரரையும், தந்தையையும் விட்டுவிடுங்கள் என்று எழுதியுள்ளார். பத்மாவின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.