கடற்கரை சாலைக்குள் நுழைந்த காரை சோதனையிட முயன்ற போலீசாரை, டிஜிபி மகள் என்று கூறி பெண் ஒருவர் மிரட்டும் காட்சி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து, கடற்கரைப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் போலீசார்.

கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, சர்வீஸ் சாலையில் யாரும்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை கடற்கரை சர்வீஸ் சாலைக்குள் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று செல்ல முயன்றது. அங்கு பணியில் இருந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினார். இதனால், போலீசாருக்கும் காரில் வந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காரில் வந்த ஆண், போலீசாரைப் பார்த்து, உங்களுக்கு என்ன பிராப்ளம்? எதற்கு செக் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு போலீசார், கார் உள்ளே செல்லக் கூடாது என்று கூறுகிறார். அதற்கு அந்த ஆண், அருகில் உள்ள பெண்ணைக் காண்பித்து இவர் டிஜிபி-யின் மகள் என்கிறார். மேலும், அவர் போலீசாரிடம், நான் குடித்திருக்கிறேனா பாருங்கள் என்று கேட்கிறார்.

இந்த உரையாடலை போலீசார் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அந்த பெண், எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்? ரெக்கார்டு பண்ணாதீங்க... என்று சொல்லியபடியே, ஐ கால் மை டூ மை டாடி என்று ஆவேசமாக பேசுகிறார். பின்னர், போலீசாரைப் பார்த்து உங்கள் பெயர் என்ன? என்று கேட்கிறார், அதற்கு போலீசார், கார்த்திகேயன் என்று பதிலளிக்கிறார். நீங்கள் இங்கு வேலைப் பார்க்க வேண்டாமா? என்று கூறியபடி, இந்த வீடியோவை இண்டர்நெட்டில் போடப்போகிறீர்களா? என அந்த வீடியோ காட்சி முடிகிறது.

இந்த சம்பவம் நடந்த இடம் பாலவாக்கம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாருடன் பெண் நடத்திய வாக்குவாதம் குறித்து போலீஸ் தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே போலீசார் கூறியுள்ளனர். கான்ஸ்டபிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் தன்னை டிஜிபியின் மகள் என்று கூறினாலும், கான்ஸ்டபிள் எதற்கும் பயப்படாமல் பதிலளிக்கிறார்.

வீடியோவில் உள்ள கார், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரின் உரிமையாளர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரியை காட்டுகிறது. விசாரணையில் சொகுசு காரில் வந்த பெண், தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக இருக்கும் ஒருவருடைய மகள் என்பது தெரியவந்துள்ளது.