புதுக்கோட்டை

புதுக்கோட்டைய்ல் மனைவி மர்மமான முறையில் தூக்குப்போட்டு இறந்ததால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவனை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள வெள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி (30). இவரது மனைவி ராஜகுமாரி (22), இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாம். நேற்று மாலை ராஜகுமாரி வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் காவலாளர்கள் ராஜகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ராஜகுமாரியின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்றும், அவரது கணவரை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, நேற்று இரவு காரையூரில் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்த பொன்னமராவதி துணை காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கார்த்திகைசாமி மற்றும் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

இதனையடுத்து காரையூர் காவலாளர்கள் தண்டாயுதபாணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.