Tamilnadu Rain : இன்றும், நாளையும் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (டிசம்பர் 8) கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (டிசம்பர் 9) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.