திருவாரூர்

மன்னார்குடியில் சாராயக் கடை திறக்க கோரியும், திறக்கக் கூடாது என்றும் ஒரே கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அதிகாரிகள் என்னசெய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடினர்.

அருகே புதிதாக மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடை திறப்பதற்கு வரவேற்றும் வெள்ளிக்கிழமை ஒரே கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் போட்டிப் போட்டு  சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆதிச்சப்புரம் கிராமத்தில் புதிதாக அரசு சாராயக் கடை திறப்பதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இதனை அறிந்த ஆதிச்சப்புரம், குன்னீயூர், சேரி, பனையூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆதிச்சப்புரத்தில் சாராயக் கடை அமைத்தால் ,பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும்  என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு தரப்பினர், அரசு சாராயக் கடைகள் மூடப்பட்டதால் பெட்டிக்கடை, தேநீர் கடை உள்ளிட்ட பல இடங்களில் அதிக விலை வைத்து சாராய புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் கூலித் தொழிலாளிகள் சம்பளப் பணத்தை முழுமையாக இழந்து விடுவதாகவும், மேலும் சாராயக் கடை இருந்தால் குடிகாரர்கள் ஒரே இடத்தில் வாங்கிச் செல்வார்கள்,

கடை இல்லாததால் கடைக்கு கடை குடிகாரர்கள் நின்றுக் கொண்டிருப்பதால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறி சாராயக் கடையை அமைக்க வேண்டும் எண்ட்ரு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் அரசு சாராயக் கடையை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆதிச்சபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மன்னார்குடி, - திருத்துறைப்பூண்டி சாலையில் கம்மங்குடி வளைவு அருகேசாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், திருத்துறைப்பூண்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் ஜெயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் கே.மாரிமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை  நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடைபெற்று முடிந்த நிலையில், அரசு சாராயக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி, கம்மங்குடி வளைவு அருகே ஆதிச்சப்புரத்தை சேர்ந்த வேறு ஒருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன், திருத்துறைப்பூண்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் ஜெயராஜ், கோட்டூர் காவல் ஆய்வாளர்ஜோதி முத்துராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

ஒரே நாளில் சாராயக் கடை திறக்க வேண்டும் என்றும், திறக்கக் கூடாது என்றும் ஒரே கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.