பயண திட்டத்தை மாற்றுங்கள்.! சென்னை திரும்பும் மக்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை நுழைவு வாயிலில் கூட்டம் அதிகரித்து, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொங்கல் கொண்டாட்டம்- விடுமுறை
பொங்கல் பண்டிகையானது தமிழக மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக ஜனவரி 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் தொடர் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இயற்கை அன்னையை வணங்கியும், மாட்டு பொங்கல் தினத்தில் மாடுகளை அலங்கரித்தும், காணும் பொங்கல் தினத்தில் மக்கள் ஒன்றாக கூடியும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த வகையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறையானது விடப்பட்டது. இதனால் 10 முதல் 15 லட்சம் மக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் வெளியூர் சென்றனர்.
மீண்டும் துவங்கம் பணி
இந்த நிலையில் விடுமுறை முடிந்து வருகிற 20ஆம் தேதி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படவுள்ளது. எனவே வெளியூர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தற்போதே சென்னை நுழைவு வாயிலில் கூட்டமானது அதிகரித்து காணப்படுகிறது. வாகன நெரிசலும் அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் சென்னை திரும்பும் மக்களுக்கு வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 20 ஆம் தேதி மீண்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் தொடங்கவுள்ள நிலையில் வருகிற 19ஆம் தேதி வெளியூர் சென்ற மக்கள் ஒட்டுமொத்தமாக திரும்பவுள்ளனர்.
பயண திட்டத்தை மாற்றி அமையுங்கள்
இதற்காக தற்போதே திட்டமிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் அனைவரும் 19 ஆம் தேதி சென்னைக்கு திரும்புவதால் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 19ஆம் தேதிக்கு பதிலாக இன்றும், நாளையும் தங்களின் பயணத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.