அனுப்பர்பாளையம்,

திருப்பூரில், தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக வந்த புள்ளிமான் ஒன்று, தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

திருப்பூர் அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. இவை தண்ணீருக்காக அடிக்கடி அங்குள்ள தோட்டத்திற்குச் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் அவை, நாய்களால் கடித்துக் குதறப்பட்டும், சில நேரங்களில் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும் இறந்து விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று காலையில் நல்லகட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் மான் ஒன்று இறந்துக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு ராமசாமி தகவல் அளித்தார். அந்தப் பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடந்த மானை மீட்டனர்.

அந்த மான் 1½ வயதுடைய பெண் புள்ளிமான் என்றும், தண்ணீர் குடிக்க வந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த மானை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு அடக்கம் செய்தனர்.