மருத்துவ மேல்படிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்து மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 98 சதவீத மாணவர்களின் மருத்துவ கனவை பறித்துள்ளது.

இந்நிலையில், எம்பிபிஎஸ் படித்து முடித்து 2 ஆண்டுகள் அரசு மருத்துமனைகளில் பனியாற்றினால் மருத்துவ மேல்படிப்பு படிப்பதற்கு தமிழக அரசு வழங்கி வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மேல்படிப்பு தொடர அரசு வழங்கி வந்த 50 சதவீத இடஒதுக்கீடை உறுதிபடுத்த, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

மருத்துவ மேல்படிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும். எனவே மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

மருத்துவர்களின் கோரிக்கையும் அரசின் கோரிக்கையும் ஒன்றுதான். நீட் தேர்வு, மருத்துவர்கள் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் முதலமைச்சர் வலியுறுத்துவர்.

புதுகோட்டையில், 249.46 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிக்கான கட்டட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பின்பு புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி திறக்கபடும்.

கல்லூரி திறந்தவுடன் 150 மாணவர்களின் சேர்க்கை நடப்பு ஆண்டே நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.