ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி - ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் சென்னை ஈசிஆர் சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்வில் 40 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் அதிகளவு கூட்டம் கூடியதால் ஈசிஆர் சாலையே ஸ்தம்பித்தது. இதன் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் வெளியே காத்திருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை போராட்டம்- மக்கள் பாதிப்பு
இதே போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததை கண்டித்தும், அவரை பதவி விலக கோரியும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் மாலை நேரத்தில் பணி முடிந்து பொதுமக்களால் வீடு திரும்ப முடியாமல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இந்த சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து சரியான வகையில் கையாளதால் ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.