பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவிற்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த  நிலையில், வருகிற 3 ஆம் தேதி அந்த தெருவிற்கு விவேக் பெயரை முதலமைச்சர் சூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்தவர் விவேக். தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். மேலும், சமூக கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், அனைவருக்கும் புரியும் வகையில் கூறியவர் விவேக். இதனால் நடிகர் விவேக்கை சின்னக் கலைவாணர் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர். 1987ஆம் ஆண்டில் இயக்குனர் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக நடிகர் விவேக்கிற்கு 2009ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை 5 முறைகள் நடிகர் விவேக் வென்றுள்ளார்.

மாரடைப்பால் திடீர் மரணம்

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மீது கொண்ட அன்பு காரணமாக 1 கோடி மரம் நடும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினார். மரம் நடுவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து அடுத்த நாள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால். சிகிச்சை பலனினின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சாலைக்கு விவேக் பெயர்

இதனையடுத்து கடந்த வாரம் விவேக் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு விவேக் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி முதலமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வருகிற 3 ஆம் தேதி நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னக்கலைவாணர் விவேக் சாலை என பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விவேக் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.