மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரும் மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.