காரியாபட்டி,
விருதுநகரில், பணம் தர மறுத்த மனைவியை அரிவாளள் வெட்டிய கண்வன், தாமாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரியாபட்டி அருகிலுள்ள தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (48). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்திரா (40). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மகன் கதிரேசன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவர் அனுப்பிய பணத்தில் வீடு கட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மனைவியிடம், செலவுக்கு பணம் கேட்டு வேல்முருகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். பணம் தராமல் சந்திரா மறுத்துள்ளார். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், மனைவியை அரிவாளால் வெட்டினார்.
பின்னர், விருதுநகர் சென்று மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் தாமாகவே சரண் அடைந்தார்.
வெட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் சந்திரா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காரியாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
