துபாயில் தலைமறைவாகவுள்ள பிரபல ரவுடி காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபாலுடைய மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றத்தில் பிறந்தவர் ஸ்ரீதர் தனபால். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கள்ளச்சாராயம் மூலம் தன் வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார்.  

காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபால் மீது 7 கொலை வழக்கு, நில அபகரிப்பு வழக்கு என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் ஸ்ரீதர் தனபால் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாகவும், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

இதைதொடர்ந்து வெளிநாட்டில் படித்துவந்த அவரது மகன் சந்தோஷ்குமார், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை வந்தார்.

இதையறிந்த சிவகாஞ்சி போலீசார், சந்தோஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் 12 மணி நேரம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இரண்டாவது நாள் விசாரணைக்காக அதிகாரிகள் காத்திருந்தபோது சந்தோஷ் குமார் ஆஜராகவில்லை.

இதனால் எஸ்பி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் தனிப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சந்தோஷ்குமார் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. 

மேலும் அவரின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,  ஸ்ரீதரின் மகன் விசாரணைக்காக மீண்டும் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.