கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மீன்பிடித்த இளைஞரை அடித்துக் கொலை செய்துள்ளதாக கூறி அவரது சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் இருக்கும் கே.ஆர்.பி அணையில் முனிராஜ் என்பவரின் சடலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நீரில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. அவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்ற தகவல் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த முனிராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து முனிராஜின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
மேலும், இவர்கள் மீன்களை பராமரிக்கும் மீன் கொட்டகைக்கும் யாரோ தீ வைத்துள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களை வைத்தும் பார்க்கும்போது, முனிராஜை யாரோ கொலை செய்துள்ளனர் என்று கிராம மக்கள் சந்தேகப்பட்டனர்.

முனிராஜின் உடலில் அடிப்பட்ட காயங்கள் இருப்பதைக் கண்ட மக்கள் அதனை உறுதிப்படுத்தினர். முனிராஜை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர் என்று அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி இராயக்கோட்டை சாலையில் உள்ள பெத்ததாளப்பள்ளி என்ற இடத்தில் முனிராஜின் உடலை வைத்தும், மீன்களை கொட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்த தகவல் அறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை எடுப்பதில்லை எனக்கூறியும் கிராம மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்த பின்னரே கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர், காவலாளர்கள் முனிராஜின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம மக்களின் இந்த போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
