தருமபுரியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன், சிறையில் திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் மணிவண்ணன் (55). இவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு காரணமான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க கட்டப்பஞ்சாயத்து செய்ததாக செய்திகள் வெளியான. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திமணி கடந்த 15-ம் தேதி தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து கடந்த 16-ம் தேதி ஆசிரியர் மணிவண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆசிரியர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறையில் ஆசிரியர் மணிவண்ணனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் மணிவண்ணனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட உறவினர்கள், தாங்கள் வலியுறுத்தும் மருத்துவரும் பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


