The reason for the violent incidents in our area of silence is the alcoholism ...

திருப்பூர்

அமைதியாக இருந்த இப்பகுதியில் டாஸ்மாக் சாராய கடை செயல்படுவதால்தான் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, சாராயக் கடையை மூடும்வரை போராட்டத்தை தொடர்வோம் என்று அவினாசி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தண்ணீர்பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த நிலையில் நேற்று சி.பி.எம். மாவட்ட உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில், தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறியது: “தண்ணீர் பந்தல், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பனியன் கம்பெனி உள்ளிட்ட பிற வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் டாஸ்மாக் சாராயக் கடை உள்ள சாலையின் வழியாக சென்று வர வேண்டியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடை அருகில் தனியார் பள்ளி உள்ளது. இதனால் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

அமைதியாக இருந்த இப்பகுதியில் டாஸ்மாக் சாராய கடை செயல்படுவதால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, இங்கு டாஸ்மாக் செயல்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு அவினாசி காவல் ஆய்வாளர் கமலகண்ணன், உதவி ஆய்வாளர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தாமணி, கிராம நிர்வாக அலுவலர் செண்பகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாஸ்மாக் சாராயக் கடையை மூடினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி டாஸ்மாக் சாராயக் கடைக்கு செல்லும் பாதையில் அமர்ந்தும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் பிரச்சனை தொடர்பாக ஆட்சியரிடம் முறையாக மனு கொடுங்கள். அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். அத்துடன் ஆட்சியரிடமும் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என்றும் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.