புதுக்கோட்டை

நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 143-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர்.

அதன்படி தினமும் வெவ்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 143-வது நாளாகவும் போராட்டத்தை நடத்தினர்.

150-வது நாளைத் தொடப்போகும் இந்த நிலையில் கூட மத்திய அரசோ, மாநில அரசோ ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யும் என்ற உத்தரவையோ, மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற குறைந்த உறுதியையோ கூட தரவில்லை.  இது மத்திய, மாநில அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

இந்த போராட்டத்தில் ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பெரும் முழக்கங்களை எழுப்பினர்.

இதில், ஏராளமான இளைஞர்கள், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.