The police team formed for to meet the lonely children
கடலூர்
கடலூரில் அனாதையாக, பிச்சை எடுத்துக் கொண்டு சுற்றித் திரியும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமைக்கப்பட்ட காவல் குழுவிற்கு மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும், அனாதையாக, பிச்சை எடுத்து சுற்றித் திரியும் குழந்தைகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் மற்றும் வறுமையில் வசிக்கும் பெற்றோர் சம்மதத்துடன் அவர்களுக்கு போதிய கல்வி அறிவு வழங்கவும் “ஆபரேஷன் முஸ்கான்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015–ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஆபரேஷன் முஸ்கான் திட்டத்தை செயல்படுத்த கடலூர், சிதம்பரம் உள்பட ஏழு உட்கோட்டங்களிலும் தலா ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசியது:
“இது ஒரு நல்ல சேவை, இந்த சேவை மூலம் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போன 18 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்மூலம் உங்களுக்கும் உதவி செய்த திருப்தி கிடைக்கும்.
அனாதையாக, பிச்சை எடுத்துக்கொண்டு சுற்றித்திரியும் குழந்தைகளையும், அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்ய முடியும். அவர்கள் படிக்க விரும்பினால் அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினால் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த குழந்தைகளை மீட்டு சைல்டு லைன் மூலம் காப்பகத்தில் ஒப்படைத்து படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று அவர் பேசினார்.
இந்தக் குழு வருகிற 31–ஆம் தேதி வரை செயல்படும். இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஏட்டுகள் பங்கேற்றனர்.
கடந்தாண்டு இந்த திட்டத்தின் மூலம் காணாமல் போன 20 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது கொசுறு தகவல்.
