The people who besieged Vijaya Bhaskar who went to visit the Dengue Impact!
டெங்கு பாதிப்பு குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி விஜயபாஸ்கரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலுக்காக நிலவேம்பு குடிநீர் வழங்க வந்திருந்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அங்கு டெங்கு குறித்து மக்களிடமும் பள்ளி மாணவ மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் பேசிய அமைச்சர், டெங்கு குறித்த விழிப்பு உணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அதன்பின்னர், திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். அங்கே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் வெளியில் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அமைச்சருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், பொதுமக்களுக்கு எந்த வித சாதகமான பதிலையும் அளிக்காமல் அமைச்சர் காரில் ஏறிப் புறப்பட்டார்.
இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள், அமைச்சரின் செயலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கே வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
