கடலூர்

தமிழகத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எங்கள் கட்சியுடன் கைகோர்க்கும் கட்சிதான் அடுத்து ஆட்சியமைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கடலூர் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசு சார்பில் சிதம்பரத்தில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா, விவசாயிகள் தின பொதுக் கூட்டம் போன்றவை நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன் வரவேற்றார். நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் அறிமுக உரையாற்றினார்.

மாநிலச் செயலர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார், மாவட்டத் தலைவர்கள் ஆர்.ஞானச்சந்திரன், ஏ.நெடுஞ்செழியன், மாநில இளைஞரணி ஆர்.அருணேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் கே.ரஜினிகாந்த், கே.நாகராஜன், எஸ்.கே.வைத்தி, தில்லை கோ.குமார், கே.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியது:

“தமிழகத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை. குடிக்கவும் தண்ணீர் இல்லை. மக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமெனில், காமராஜர் காலத்தைப் போல அரசுக்கு தொலைநோக்குப் பார்வை தேவை.

அதனடிப்படையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கூடிய உத்திகள், புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை அரசு முறையாக நடத்த வேண்டும்.

காவிரி டெல்டா பகுதிகளான கடலூர், நாகை மாவட்டங்களில் சுமார் 110 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களையும் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

இந்தப் பகுதிகளை கையகப்படுத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாகிவிடும். இதனால் 150 இலட்சம் டன் பயிர் உற்பத்தி பாதிக்கும். எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. மத்திய அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கரும்பு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கரும்பு நிலுவைத் தொகை ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை கட்டமைப்புப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே, மாநில அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலைச் சந்திக்க தமாகா தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் சக்தியாக தமாகா உருவெடுத்துள்ளது. எங்கள் கட்சியுடன் கைகோர்க்கும் கட்சிதான் அடுத்து ஆட்சியமைக்கும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாநில பொதுச் செயலர்கள் ஏ.எஸ்.முனவர் பாஷா, ஏ.எஸ்.சக்தி வடிவேல், மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, மாநில மாணவரணி தலைவர் எம்.சுனில்ராஜா, மாநில மகளிரணி தலைவர் ராணி கிருஷ்ணன், மாநில தொண்டரணி தலைவர் எம்.அயோத்தி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.