கோயம்புத்தூர்

ஊராட்சி செயலர்களுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல் என்று நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
 
கோயம்புத்தூர் கொடிசியா தொழிற்கண்காட்சி அரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாதனை மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, கஸ்தூர் வாசு,  எட்டிமடை ஏ.சண்முகம்,  

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ்,  தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கழக மாநிலத் தலைவர் பொ.செளந்தரராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாதனை மலரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு பேசியதாவது:

"நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1922.13 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊரகப் பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பில் நகரப் பகுதிகளுக்கு இணையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 500 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில் இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மன வளத்தினை மேம்படுத்த ரூ.50 கோடி மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  

தமிழகத்தில் உள்ள 12,224 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு ஊராட்சி செயலர் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ரூ.5,348.82 கோடி மதிப்பில் 3.18 லட்சம் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும், ரூ.15,538 கோடி மதிப்பில் 59,913 கிமீ சாலைப் பணிகள், ரூ. 793 கோடி மதிப்பில் தெருவிளக்குகள்,  ரூ.654 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் என பல கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊராட்சி செயலர்களுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், 

ஊராட்சி செயலாளர்களுக்கு கிராம ஊராட்சி அதிகாரி பணியிடம் வழங்குதல், 

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குநர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பாரிசீலிக்கப்படும்" என்று பேசினார்.