Asianet News TamilAsianet News Tamil

ஓஎன்ஜிசி எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பது தவறான பிரச்சாரம் என்கின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள்...

The ONGC oil is not cause damage to groundwater.
The ONGC oil is not cause damage to groundwater.
Author
First Published Jan 11, 2018, 11:24 AM IST


திருநெல்வேலி

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் எடுக்கும் பணிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்ற தவறான பிரச்சாரத்தால் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் குழம்புகின்றனர் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

திருவாரூரில் ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் குறித்த விவசாயப் பிரதிநிதிகளுடனான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, தமிழக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. சேதுராமன் ஆகியோர் தெரிவித்தது:

"கடந்த 40 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எடுக்கும் பணிகளை செய்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஷேல் வாயு, மீத்தேன் எடுப்பதாக பிரச்சனை எழுந்தபோது, அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும், அதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து மத்திய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்தது.

ஓஎன்ஜிசி நிறுவனம், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை மட்டுமே எடுக்கிறது. இதற்கு ராயல்டியாக ரூ. 2800 கோடி தமிழக அரசுக்கு அளிக்கிறது. மேலும், ஓஎன்ஜிசி சார்பில் ஆண்டுதோறும் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி (சிஎஸ்ஆர்) ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்துக்கு குறைவாகவே வழங்கப்படுகிறது. இதற்கு காரணம், மற்ற மாநிலங்களில் ஓஎன்ஜிசியின் திட்ட செயல்பாடுகளை புரிந்துகொண்டு அதற்கான முழு ஒத்துழைப்பை அளிப்பதால், மற்ற மாநிலங்களில் சிஎஸ்ஆர் நிதியாக சுமார் ரூ. 50 முதல் 100 கோடி அளவுக்கு பயனடைகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதால் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் குழம்புகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நிலையை தவறாக பிரச்சாரம் செய்வோர் கைவிட வேண்டும்.

ஓஎன்ஜிசி நிறுவன செயல்பாடுகள் குறித்து இணையதளத்தில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. எதையும் மறைத்து எதுவும் செய்து விட முடியாது. ஷேல் வாயு, மீத்தேன் வாயு எடுப்பதில்லை என்று ஓஎன்ஜிசியின் உறுதியின்பேரிலேயே அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கிறோம்.

மேலும், ஷேல் வாயு, மீத்தேன் வாயு எடுப்பதில்லை என ராகேஷ் மிஸ்ரா என்பவர் 2017 ஜனவரி 19 -ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக அட்டர்னி  ஜெனரலுக்கு  உறுதி அளித்துள்ளார். எனவே, இதை நாம் நம்பியாக வேண்டும்.

டெல்டா பகுதி மக்கள் மேட்டூர் நீரை நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இன்றைய நிலையில் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. நம்மிடம் 23 ஆறுகள் இருந்தும் நீரை சேமிக்கும் அளவுக்கு தடுப்பணைகள் இல்லை. சமதள பரப்பு என்பதால் நீரை சேமிக்க முடிவதில்லை.

ஆனால், தமிழக அரசு தடுப்பணைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீரை சேமிக்க தடுப்பணை கட்டித் தர வேண்டும் ஓஎன்ஜிசியிடம்  கேட்டபோது, அரசிடம் இதுகுறித்து ஆலோசித்து பெரிய அளவில் நிதி ஒதுக்கி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் வற்றிவிடும் என தவறான கண்ணோட்டம் உள்ளது.  நமது நீர் தேவையைச் சமாளிக்க 150 முதல் 200 அடி வரை மட்டுமே தேவைப்படும். ஆனால், அவர்கள் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்துக்குப் பிறகே தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். இரண்டுக்கும் நடுவில் ஏராளமான அடுக்குப் பாறைகள் உள்ளன. எனவே, எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

குடிநீர் குழாய் அருகே செப்டிக் டேங்க் நீர் கலந்தால் பாதிக்குமே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், குடிநீர் குழாய் அருகே செப்டிக் டேங்க் இருந்தாலும், இரண்டும் ஒன்றாக கலப்பதில்லை.

அதே நிலைதான் இங்கும். எனவே, ஓஎன்ஜிசியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பது, மக்களிடையே வதந்தியைக் கிளப்பும் முயற்சியே. ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களுக்கு எதிரான நிறுவனம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது, பாலம் சேவை நிறுவன செயலர் கே. செந்தில்குமார், தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios