The old age is the only one who has won gold at the Asian Athletes

கோயம்புத்தூர்

ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் 77 வயதான கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று வயது வெறும் எண் மட்டும்தான் என்று நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்.ஏ. சுப்பையா (77). இவர், திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர், தனது 65-வது வயதிலிருந்து தேசிய, ஆசிய, சர்வதேச அளவில் நடைபெற்று வரும் மூத்தோர்களுக்கான பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று வருகிறார்.

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, இதுவரை சர்வதேச அளவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஆசிய அளவில் ஒன்பது பதக்கங்களையும், தேசிய அளவில் 12-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று சாதித்து அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

போன மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 25 வீரர்கள் கலந்து கொண்டதில் 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்றார் எம்.ஏ.சுப்பையா.

இவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், தட்டு ஏறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதித்துள்ளார்.

பதக்கங்களை வென்றபிறகு எம்.ஏ.சுப்பையா, “முறையான பயிற்சிக்குப் பின்னர் 2007-ஆம் ஆண்டில் இருந்து மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 5 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றேன்.

என்னைப் போன்ற மூத்தோர் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வெளிநாடு செல்லும்போது மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.