திருப்பாலைக்குடி கிராம மக்கள், துபாயில் மர்மமாக உயிரிழந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் மனு அளித்தனர்.

திருப்பாலைக்குடி காந்தி நகர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் சோணைநாதன் மனைவி பார்வதி. இவரும் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் முரளீதரன், கோட்டத் தலைவர் சண்முகராஜா மற்றும் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சோணைநாதன் துபாய்க்கு துப்புரவுப் பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்றார். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கடந்த 3-ஆம் தேதி அவர் இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மாகவே இருக்கிறது.

அவரது சடலத்தைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.