The mysterious person who jumped into the wall of the naval airbag jumping up inside Guards from the watch ...

வேலூர்

பலத்த கண்காணிப்புகள் இருந்தும் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். இராஜாளி கடற்படை விமான தளத்தில் நள்ளிரவில் சுற்றுச் சுவர் ஏறி குதித்த மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளார். அவரிடம் மத்திய உளவுப் பிரிவு, தமிழக கியூ பிரிவு காவலாளர்கள் விசாரணை நடத்துகின்றனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரையொட்டி, 2600 ஏக்கரில் ஐ.என்.எஸ். இராஜாளி கடற்படை விமானத் தளம் இயங்கி வருகிறது. இதன் சுற்றுச் சுவர் 15 அடி உயரத்தில் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் புளியமங்கலம் கிராமம் அருகே இராஜாளி சுற்றுச்சுவர் மீது மர்ம நபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 2.45 மணிக்கு ஏறி கம்பிகளை விலக்கிக் கொண்டு உள்ளே இருந்த மணலில் குதித்துள்ளார்.

உள்வட்டச் சாலையோரம் நடந்து கொண்டிருந்தபோது, சுற்றுப் பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெளியில் இருந்து உள்ளே குதித்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவரை கடற்படை காவலாளர்கள் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் நேபாளத்தில் உள்ள சங்ஜா மாவட்டம், பிர்கச்சார்கட்டியை அடுத்த பாலிஹா கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் ராணா சிங். (37) என்பது தெரிந்தது.

மேலும், தான் தச்சுத் தொழிலாளி எனவும், அரக்கோணத்தில் கணேஷ் பிரசாத் பாண்டே என்பவரிடம் வேலை செய்வதாகவும் தெரிவித்தார். தற்போது தனது குடும்பத்தார், மும்பையில் உள்ள செம்பூரில் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவரிடம் அடையாள அட்டை எதுவுமில்லை.

இதனைத் தொடர்ந்து கடற்படை காவலாளர்கள் அவரை அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக லெப்டினன்ட் கமாம்டண்ட் லலித்குமார் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான காவலாளர்கள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

மேலும், மத்திய உளவுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சக தனிப்பிரிவு, தமிழக கியூ பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு உள்ளிட்ட உயர் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். 

புது டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் மூலம் மத்திய உளவுப் பிரிவு காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.என்.எஸ். இராஜாளி கடற்படை விமானதளத்தில் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விமானதளத்தில் இருந்து தங்களது சொந்தப் பணிகளுக்காக கூட வெளியே செல்ல பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.