இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் 100 பேர் பட்டியலில் தமிழகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல ரஜினியை பின்னுக்குத் தள்ளி ஈபிஎஸ், ஓபிஎஸ் முந்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் தமிழகத்தை சேர்ந்த மு.க ஸ்டாலின், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியசுவாமி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் நம்பர் 1 இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். 2வது இடத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவாத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்.இதனையடுத்து, திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 24வது இடத்தை பிடித்துள்ளார்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பட்டியலில் 64வது இடத்தையும். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 65வது இடம் பிடித்துள்ளார்.  அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், இந்த பட்டியலில் 67 இடத்தில் உள்ளார்.  

இந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 77வது இடத்திலும், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்திலும் உள்ளனர். ஹர்திக் படேல் 99வது இடத்திலும், கர்நாடக இசைப்பாடகர் டி எம் கிருஷ்ணா 100வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்த லிஸ்டில் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் பல விஷயங்கள் நடந்திருக்கிறது. பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்களை ஈபிஎஸ், ஓபிஎஸ் முந்தியுள்ளனர். தமிழகத்தின் இரட்டை குழல் துப்பாக்கியாக இருக்கும் இந்த இரட்டையர்களை ஓரங்கட்டிவிட்டு தமிழகத்தின் முதலிடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர் ஸ்டாரை விட பின் தங்கியுள்ளது யோசிக்க வைத்துள்ளது.