அலங்காநல்லூரில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட 230 பேரை விடுவிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அலங்காநல்லூரில் சல்லிக்கட்டை நடத்த கோரி போராட்டம் தொடங்கியது. இதில் கடைகளை அடைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கிராமத்தின் சார்பில் அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்து, இரவில் சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே தங்கினர். ஆட்சியர் வீரராகராவ் அலங்காநல்லூர் வந்து விசாரணை நடத்தினார்.

 இந்த நிலையில் நேற்று அதிகாலை கல்லூரி மாணவர்கள், மாடுபிடிவீரர்கள், சல்லிக்கட்டு ஆர்வலர்கள், பெண்கள் உள்பட சுமார் 230 பேரை காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றி சென்று வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், சல்லிக்கட்டு நடத்தக் கோரியும் நேற்று காலை அலங்காநல்லூர் கிராமமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பெரியாறு கால்வாய் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டடு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.