Asianet News TamilAsianet News Tamil

ஒரு மாத மகிழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது; சொந்த ஊருக்கே திரும்பும் யானைகள்;

The month ends with joy today Elephants return to hometown
the month-ends-with-joy-today-elephants-return-to-homet
Author
First Published Mar 10, 2017, 9:03 AM IST


மேட்டுப்பாளையம்

தேக்கம்பட்டியில் ஒரு மாதமாக நடைப்பெற்று வந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று நிறைவு பெறுவதால், இங்கு மகிழ்ச்சியுடன் இருந்த யானைகள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றன.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

இங்கு தமிழகத்தில் உள்ள கோவில்கள், திருமடங்களை சேர்ந்த 33 யானைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன.

முகாமில் யானைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி, குளியல், சரிவிகித உணவு, பசுந்தீவனங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் தினமும் உடல் எடை கணக்கிடப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

முகாம் அமைந்துள்ள இடத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பிலும், சுற்றுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானைகள் புகுவதை தடுக்க முகாமை சுற்றிலும் தொங்கு மற்றும் சூரிய மின்வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் முகாமின் நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முகாமிற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பார்வையிட வந்துச் செல்கின்றனர்.

முகாமில் யானைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நட்புடன் பழகி வருகின்றன. அவைகள் துதிக்கையால் தனது உடலில் மண்ணை வீசியும், அருகருகே கட்டி வைக்கப்பட்டுள்ள யானைகளை தடவிக்கொடுத்தும் விளையாடி மகிழ்கின்றன

இந்த நிலையில் தேக்கம்பட்டியில் நடந்து வரும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று நிறைவு பெறுவதையொட்டி நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றன.

லாரிகளில் யானைகள் ஏறுவதற்கு ஏற்ப மேடை போன்ற வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரிகளில் யானைகள் நிற்பதற்கு தடுப்பு கம்புகள் கட்டும் பணியும் நேற்று நடைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios