நீலகிரி

டிக்லாண்ட்லீஸ் ஊருக்குள் புகுந்து சிறுவர், மற்றும் பெண்களை தாக்கி காயத்ஹ்தை ஏற்படுத்தி அட்டகாசம் செய்துவரும் சிங்கவால் குரங்கை பிடிக்க நவீன தானியங்கி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை அருகே உள்ளது டிக்லாண்ட்லீஸ் கிராமம். இந்தக் கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதிகளும், தேயிலைத் தோட்டங்களும் பெருமளவில் உள்ளன.

அந்த காட்டுப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. அந்த காட்டு விலங்குகள் அடிக்கடி காட்டுப் பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதும் வழக்கமே. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் சிங்கவால் குரங்கு ஒன்று அழையா விருந்தாளியாக நுழைந்தது. அந்தக் குரங்கு குடியிருப்புப் பகுதியில் சுற்றி சுற்றி வருவதுடன் மக்களை கடித்தும் அச்சுறுத்தலில் ஈடுபட்டது. மேலும் சிறுவர், சிறுமிகளை துரத்துவதால் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்களை சிங்கவால் குரங்கு தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிங்கவால் குரங்கு அட்டகாசம் செய்த பகுதியை பார்வையிட்டனர்.

பின்னர் குரங்கை பிடிக்க சில நாள்களுக்கு முன்பு வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால், அந்த கூண்டில் குரங்கு சிக்காமல் தப்பித்து வந்தது.

இதனையடுத்து நவீன தானியங்கி கூண்டு வைக்க முடிவு செய்யப்பட்ட அந்தப் பகுதியில் தானியங்கி கூண்டு வைக்கப்பட்டது.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவரும் சிங்கவால் குரங்கு விரைவில் பிடிபடும் என்று. குரங்கை பிடிக்க வந்த ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.