சிவகங்கை

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியோருடைய குறைகளைக் கேட்டறிந்து அவைகளை சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறுபான்மையின ஆணைய குழு பரிந்துரைத்தது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமையில் உறுப்பினர்கள் அல்ஹஜ் சையது கமீல்பாசீத், ஜஸ்டின்செல்வராஜ், பேராயர் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிவகங்கை வந்தனர்.

பின்னர் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நல குழு ஆலோசனை கூட்டம் ஆணையக் குழுத் தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேராயர் பிரகாஷ் பேசியது:

“தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியோருடைய குறைகளைக் கேட்டறிந்து அவைகளை சரிசெய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்தக் குழு பரிந்துரைச் செய்கிறது.

இதில் பல இடங்களில் அவர்களின் குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. சரிசெய்ய முடியாதவைகளை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தங்களுக்கு கல்லறை தனியாக வேண்டும் என்று கேட்டிருந்தனர். பல இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் ஆலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அவைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனுமதி பெற்றுத் தந்துள்ளோம்.

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.3 இலட்சம் வரை நிதி கிடைத்துள்ளது.

இதேபோல் பல பள்ளிவாசல்களை சீரமைக்க வக்பு வாரியத்தின் சார்பில் நிதி தருவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெருசலத்திற்கு புனித பயணம் செல்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை அரசு தற்போது உயர்த்தி உள்ளது. முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்வதற்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலமாக்கள் வாரியம் மூலம் பலர் உதவி பெற்று வருகின்றனர்.

சிறுபான்மை மக்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மூலமாக விதவை மற்றும் ஆதரவற்ற முஸ்லிம்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுஉள்ளது” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிகள், சிறுபான்மை நல மக்கள் பங்கேற்றனர்.

பின்னர் நலத்திட்ட உதவிகளை பேராயர் பிரகாஷ் வழங்கி சிறுபான்மையின மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.