வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக இன்று (18-ம் தேதி) தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை (19-ம் தேதி) வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு வங்க கடல் மற்றும்அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். 

இதன் காரணமாக 18, 19-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். 20-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.