கடலூர்,
கடலூரில் வெள்ள பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா தலைமையில் நடைபெற்றது.
கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா தலைமை தாங்கினார். கோட்டாச்சியர் உமாமஸ்வரி, நகராட்சி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பருவமழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேலும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா பேசினார்.
அதில், “கடந்த ஆண்டில் வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள், அங்கு தற்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ள பாதிப்பு ஏற்படுமானால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் ஊராட்சி செயலர்கள், கிரம நிர்வாக அலுவலர்கள், முதல் தகவல் அளிப்பவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
