எல்இடி. தெருவிளக்கு கொள்முதலுக்கான தமிழக அரசின் ஒப்பந்த நிபந்தனைகளுக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் மின் சிக்கனத்துக்காக எல்இடி. பல்புகள் தெரு விளக்குக்குகளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் எல்இடி பல்புகளை சென்னை மாநகராட்சி ஆய்வகத்தில் தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனையை அரசு விதித்தது. 

தமிழக அரசின் இந்த ஒப்பந்த நிபந்தனையை எதிர்த்து தியாகராய நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் சென்னை மாநகராட்சி எலக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை என்றும், ஹரியானாவில் உள்ள தேசிய சோதனை மற்றும் அளவீட்டு பரிசோதனை வாரியமே அதற்கான தகுதியான அமைப்பு என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த நிபந்தனைகள் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு சாதகமாக, உள்நோக்கத்துடன் தமிழக அரசு உருவாக்கியிருப்பதாகத் தெரியவில்லை எனவும், திட்டப்பணி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த நிபந்தனையை அரசு உருவாக்கியுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.