TNEB Bill : ஜி.எஸ்.டி இருக்கா இல்லையா..? மின்சார கட்டண ரசீதில் வரி சேர்க்கப்பட்டதால் குழப்பம்..
மின் கட்டணம் செலுத்திய ரசீதில் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மீது கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாடு பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், நுகர்வோர்களின் கருத்துகளைக் கேட்டறியாமல், நடப்பு மாத மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி விதித்து கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. கலைஞர் ஆட்சி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து வந்த ஆட்சியும் மின் நுகர்வோர் நலன் கருதி மானியங்கள் வழங்கி, கட்டணச் சலுகை அளித்து உதவி வருகின்றன. தற்போதுள்ள நடைமுறையில் வீடுகளின் மின்நுகர்வில் முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. இதுபோல் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் நுகர்வில் 100 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்திய வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இம்மாதம் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு தரப்பட்ட ரசீதில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், எதற்காக இந்த வசூல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்பவில்லை என்பதால் நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர். மின் பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர மின்சார சேவைகளுக்கான பல்வகை கட்டணங்களுக்கு மட்டும், 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பல்வகை கட்டணத்திற்கும், இதர சேவைகளுக்கான கட்டணத்திற்கும் இதுவரை ஜிஎஸ்டி வசூல் செய்யப்படவில்லை.
அதன்படி, ஜிஎஸ்டி வசூலிக்காதவர்களிடம் இருந்து நிலுவை தொகையை வசூலிக்குமாறு, ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது’ என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது இல்லை. மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது’ என்று கடந்த வாரம் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.