கணவரின் தகாத உறவின் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தகாத உறவை கொடுமை என்று கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோஷினி என்ற பெண் குழந்த இருந்த நிலையில், மாணிக்கத்திற்கு சரசு என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சங்கீதா, மாணிக்கத்தைக் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்காததால் 2003ஆம் ஆண்டு, சங்கீதா தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் இதை அடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வரதட்சணைக் கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாணிக்கத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவானது நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த வைத்தியநாதன், தகாத உறவு ஐபிசி 498ன் கீழ் வராது என்று உத்தரவிட்டார். இந்த 498 என்ற பிரிவானது கொடுமைப்படுத்துவதற்கு எதிரான சட்டப்பிரிவு ஆகும். 

மேலும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் இதைக் கருத முடியாது என்று ஐபிசி 306 என்ற பிரிவை சுட்டிக் காட்டினார் நீதிபதி. தகாத உறவை மனதளவில் துன்புறுத்தியதாகவும் கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மாணிக்கத்திற்கு தகாத உறவு இருந்ததை போலீசார் நிரூபித்து விட்டதாகக் கூறினார். ஆனால் கொடுமை, மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். 

மனதளவில் துன்புறுத்தி, மனைவியை மாணிக்கம் தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் நிரூபிக்கவில்லை என்று நீதிபதி வைத்தியநாதன் கூறினார். எனவே மாணிக்கத்தை விடுதலை செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.