கிருஷ்ணகிரி

ஓசூரில், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமின்றி கிடந்த தனியார் மருத்துவமனை, வீடு, பிரியாணி கடைகள், டீக்கடை என எல்லாவற்றிற்கும் உதவி ஆட்சியர் சந்திரகலா அபராதம் விதித்தார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள், வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமற்ற முறையில் இருந்தால், குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஏற்கனவே எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஓசூர் உதவி ஆட்சியர் சந்திரகலா தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கிரி மற்றும் ஊழியர்கள், நேற்று காலை பாகலூர் சாலை, ஆவலப்பள்ளி ஹட்கோ, கிட்டப்பா குட்டை, மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பாகலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல ஆவலப்பள்ளி ஹட்கோவில் உள்ள என்.எல்.சி., என்ற தனியார் கிளினிக்கிற்கு, ரூ.3000, அம்மூஸ் பிரியாணி கடைக்கு ரூ.2000, ஆம்பூர் தம் பிரியாணி கடைக்கு ரூ.1000 ரூபாய், ஆவலப்பள்ளி ஹட்கோவில் உள்ள எம்.ஐ.ஜி. வீட்டிற்கு ரூ.300, பாகலூர் சாலையில் உள்ள டீக்கடைக்கு ரூ.200 என மொத்தம் ரூ.16500 அபராதமாக விதித்தார் உதவி ஆட்சியர் சந்திரகலா.