The happy news for the coconut farmers is the water harvesting permit
தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
‘நீரா’ என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம் பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இது, ஆல்கஹால் இல்லாத உடல் நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து பானமாகும்.
‘நீரா’வில் வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகிறது.

தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்து வதால், ‘நீரா’ நொதிக்காது. மேலும், இயற்கை சுவை மாறாமல் நீண்ட நாள் பயன்படுத்த முடியும். ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் உற்பத்தி மூலம் ரூ.1000 ஆண்டு வருமானமாக கிடைக்கும். நீரா உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கி, பதப்படுத்தி விற்க அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
அப்போது, ‘நீரா’ உற்பத்தியை நெறி முறைப்படுத்த, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்தி, ‘நீரா’ உற்பத்தி அனுமதிக்கப்படும்.
இதற்காக விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்கள் பயன்பெறும் வகை யில்,‘நீரா’ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், நவீன கொள்கலன் களில் அடைத்து விற்கவும், தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
நீரா உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் துறை பயிற்சிகள் வழங்கும்.
தமிழக அரசின் நடவடிக்கை களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள் பலனடை வார்கள். ‘நீரா’வை பயன்படுத்தி ‘நீரா’ சர்க்கரை, ‘நீரா’ வெல்லம், தேன், லட்டு, கேக் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம்.
‘நீரா’ உற்பத்தி மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ‘நீரா’ பானத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
