தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடரை வழக்கம்போல் சென்னையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  

ஏடிபி டென்னிஸ் ஓபன் போட்டி சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அடுத்த ஆண்டு முதல் புனேவுக்கு மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும், இதனால் சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐஎம்ஜி நிறுவனத்திற்கு அழகல்ல எனவும், இந்த முயற்சியை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே ஏடிபி டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.