இராமநாதபுரம்
இராமநாதபுரம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதே முதல் குறிக்கோள் என மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணிகளை நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி, மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது நீதிபதி ஏ.கயல்விழி கூறியது:
“இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதே முதல் குறிக்கோள்.
தற்போது நடைபெற்று வரும் பணிகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.
சக்கரக்கோட்டை, தெற்குத்தரவை, இளமனூர், பனைக்குளம், சாத்தான்குளம், மஞ்சலோடை, தேவிபட்டிணம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், உதவிப் பொறியாளர் சோமசுந்தரம், மாவட்ட நீதிமன்ற அலுவலக மேலாளர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
