நீலகிரி

நீலகிரியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்க ஆலயமான 179 ஆண்டு பழமை வாய்ந்த புனித மரியன்னை ஆலயத்தில் தேர் பவனி நடைப்பெற்றது.

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஊட்டியில் ஆட்சியர் அலுவலகம், கல் பங்களா, புனித மரியன்னை ஆலயம், ஸ்டீபன் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு கட்டிடங்களை கட்டினர்.

இந்தக் கட்டிடங்கள் இன்றும் பழமை மாறாமல், வலிமையுடனும், பொலிவுடனும், கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. அதில் 179 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மரியன்னை ஆலயம் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ளது.

ஊட்டிக்கு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்திற்கு வந்துச் செல்வது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்ந்து வருகிறது. புனித மரியன்னை ஆலயம் 179-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு, நாள்தோறும் சிறப்பு திருப்பலி, மறையுரை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

நேற்று முன்தினம் ஆண்டு திருவிழா, அன்னை மரியாள் விழா, சுதந்திர தின விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் நீலகிரி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதையடுத்து மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், பங்கு தந்தை வின்சென்ட், பங்கு குருக்கள் சகாயதாஸ், வில்லியம்ஸ், எட்வர்ட் சார்லஸ் ஆகியோர் இணைந்து காலை 9 மணியளவில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினர்.

பின்னர் மதியம் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை சோனி தலைமையில் மலையாளத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

தேர் பவனியை பங்கு தந்தை வின்சென்ட் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பாடல்கள் பாடியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும் சென்றனர்.

தேர் பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

திருவிழாவையொட்டி, பல்வேறு வண்ண மின் விளக்குகளால் ஆலயம் ஜொலித்தது என்பது கொசுறு தகவல்.