The federal government provides the answer - Farmers in perseverance

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ஆவது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் அரைநிர்வாண போராட்டம், ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு, நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.

தங்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும் வரையிலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையிலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கையை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சரையும், நீர்பாசன அமைச்சரையும் சந்திக்க வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ள 7 நாள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.