Asianet News TamilAsianet News Tamil

டிக்கெட் எடுக்க சொன்னதால் கண்டக்டரிடம் குழந்தையை விட்டுச் சென்ற தந்தை!

The father left the baby in the bus
The father left the baby in the bus
Author
First Published Jun 28, 2018, 3:34 PM IST


இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்னதால், அரசு பேருந்து நடத்துனரிடமே தனது குழந்தையை விட்டுவிட்டு, தந்தை வீட்டுக்கு சென்ற சம்பவம் நாகையில் நடந்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் இதயதுல்லா. இவர் நேற்று தனது இரண்டரை வயது குழந்தையுடன் திருவாரூருக்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது நடத்துனரிடம், திருவாரூருக்கு ஒரு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர், உங்கள் குழந்தைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு இதயதுல்லா, குழந்தைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. எனவே டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்று கூறினார். ஆனால் நடத்துனரோ, குழந்தைக்கு இரண்டரை வயது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக கூறியுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் டென்ஷனான இதயதுல்லா, எனது குழந்தைக்கு இரண்டரை வயது என்பதை நம்ப மறுக்கிறீர்கள். அவனது பிறப்பு சான்றிதழ் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு, குழந்தையை நடத்துனரிடம்  விட்டுவிட்டு, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மற்றொரு பேருந்தில் தனது வீட்டுக்கு சென்றார்.

இதயதுல்லாவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பேருந்து நடத்துனர், குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்தார். இதன் பின்னர் குழந்தையை பேரளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

வீட்டுக்கு சென்ற இதயதுல்லா, குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு அடுத்த பேருந்தில் ஏறி பேரளத்துக்கு வந்தார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்ட இதயதுல்லா, அங்கு சென்று பார்த்தபோது, தனது குழந்தை இருப்பதை கண்டார். பின்னர் நடந்ததை கூறி போலீசாரிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தந்தையிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios